Sri Mahavishnu Info: ஸ்ரீ கந்தாடை ஆண்டான் வைபவம் | Sri Kandadai Andaan Vaibhavam ஸ்ரீ கந்தாடை ஆண்டான் வைபவம் | Sri Kandadai Andaan Vaibhavam

ஸ்ரீ கந்தாடை ஆண்டான் வைபவம் | Sri Kandadai Andaan Vaibhavam

Sri Mahavishnu Info
மாசி புனர்பூசம் நக்ஷத்திரம்.

மாசி புனர்பூசத்தினில் அவதரித்தவர் ஸ்ரீ கந்தாடை ஆண்டான்.

முதலியாண்டானுடைய ஒரே குமாரர் கந்தாடை ஆண்டான்.  

"ராமாநுஜார்ய பூயிஷ்டாம் நாம உக்திம் ப்ரசஷ்மஹே |
யதீந்த்ர கரஸம்ஸ்பர்சஸௌக்யம் யேநாந்வயபூயத ||"

என்று யதிராஜர்  எடுத்தணைத்த இன்பம் கண்ட கந்தாடையாண்டானை உலகம் போற்றி வணங்குகிறது.  முதலியாண்டானுக்குப் பிறகு, இவரே முதன்மையானவராகத் திகழ்ந்து, கோயில் ஸ்ரீகாரியத்தை நடத்திவந்ததாக அறிகிறோம்.    கந்தாடை ஆண்டானுடைய குமாரர், கந்தாடைத் தோழப்பர் ஆவார்.  

முதலியாண்டான் ஸ்ரீ இராமபிரானின் அம்சமாகவே சித்திரை மாதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்.  பகவான் தான் இராமானாக அவதரித்த போது , தனக்கு அடிமைப்பட்டு, சகல கைங்கர்யங்கள் செய்த ஆதிசேஷனின் அவதாரமான இளைய பெருமாளுக்குத், தான் இன்னொரு பிறவி எடுத்து  அவருக்குக் கைங்கர்யங்கள் புரியவேண்டும் என்று விருப்பம் கொண்டான்.    இராமாவதாரத்தில் இராமபிரானுக்குத் தம்பியாய் லக்ஷ்மணராகவும் 

கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்கு அண்ணனாய் பலரமானாகவும் , பின்னர் பெருமாளின் அவ்வவதரங்கள் முடிந்தபின், பெருமாள் இட்ட பணியால், இக்கலியுகத்தில் ராமானுஜராகவும் அவதரித்தவர் "ஆதிசேஷன்".  இவ்வுலகத்தார் அனைவரும், பிறவி என்னும் பெருங்கடல் வற்றி, தன்னை அடைந்து உஜ்ஜீவனம் அடையவேண்டும் என்ற விருப்பத்தாலேயே, ஆதிசேஷனை ராமானுஜராகப் பிறக்கச் செய்து, அவர் சம்மந்தத்தால் உலகோர் உய்வதற்கு வகை செய்தான் எம்பெருமான். 

லக்ஷ்மணருக்குத் தான் ஒரு கைம்மாறு செய்யும் எண்ணத்தில், திரேதா யுகத்தில் இராமனாய் அவதரித்த பகவான் இக்கலியுகத்தில் முதலியாண்டானாய் அவதரித்து,  ஆதிசேஷனின் அம்சமாய், இக்கலியுகத்தில் அவதரித்த ராமானுஜரின் பரம சீடராய் இருந்து, அவருக்கு சகல கைங்கர்யங்களையும் புரிந்தான்.  இராமபிரானுக்கு "தாசரதி" என்ற ஒரு திரு நாமம் உண்டு.    ஆகவே, சித்திரை மாதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் அவதரித்த இராமபிரானின் அம்சமாகவே, சித்திரை மதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் முதலியாண்டான் அவதரித்ததால், அவரது பெற்றோர்கள் முதலியாண்டானுக்கு இட்ட பெயர் "தாசரதி" என்பதாகும்.    முதலியாண்டான் பெற்ற சிறப்பு, ராமானுஜரின் திருவடி நிலையாகவே  கருதப்படுகிறார்.  முதலியாண்டான் பெற்ற இன்னொரு பெருமை, அவர் ராமானுஜரின் மருமகன் ஆவார்; அதாவது, முதலியாண்டான் ராமானுஜரின் சகோதரியின் புதல்வர் ஆவார். 

"பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் || 

என்பது முதலியாண்டனைப் போற்றும் தனியன் ஆகும்.  அதாவது, ஸ்ரீவைஷ்ணவ உலகில் பெருமைக்குரிய ஆசார்ய புருஷர்களாகத் திகழும் கோவில் கந்தாடை வாதூல வம்சத்தவர்களின் மூலபுருஷர் முதலியாண்டான் என்று போற்றப்படும் தாசரதிமஹாகுரு ஆவார் என்பதே இந்தத் தனியனின் விளக்கம் ஆகும். 

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த முதலியாண்டானும் அவரது மனைவியும் தாங்கள் ராமானுஜரின் சம்மந்தத்தைப் பெற்ற பெரும் பக்கியசாலிகளாகக் கருதி, பேரின்பத்துடன் அவருக்குக் கைங்கர்யங்கள் புரிந்து வந்தனர். இருந்தாலும், அவர்கள் மனத்திலும் ஒரு பெரும் குறை இருந்தது; "தங்களுக்குக் குழந்தைப் பேறு இன்னும் வாய்க்கவில்லையே" என்பதே அது.  அந்தக் குறையை அவர்கள் பகவத் ராமாநுஜரிடம் தெரிவித்தனர்.  அப்படி அவர்கள் தங்கள் குறையை அறிவித்த சமயம், திருவரங்கநாதன் அமுது செய்த பிரசாமானது ஒரு கிழிந்த துணியால்  (கந்தை ஆடை) மூடப்பட்டு, ராமாநுஜர் ஸ்வீகரித்துக் கொள்வதற்காக  கொடுக்கப்பட்டது. அப்படி அந்தப்  பிரசாதம் மூடிவைக்கப்பட்ட கந்தாடையானது, திருவரங்கநாதன் திருமேனியில் சாற்றப்பட்ட வஸ்திரம் ஆகும்.  ராமாநுஜர் தனக்குக் கிடைத்த அரங்கன் பிரசாதத்தை முதலியாண்டானுக்கும் அவர் மனைவிக்கும் கொடுத்து அவர்களை உண்ணச் செய்து, "உங்களுக்குக் கூடிய சீக்கிரம் அரங்கனின் அருள் கிடைக்கும்"; அதாவது, புத்திரப் பேறு உண்டாகும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.  

அரங்கனின் பிரசாதமும், ராமானுஜரின் ஆசியும் சேர்ந்து, முதலியாண்டனின் மனைவி கருத்தரித்து, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.   அந்தக் குழந்தையைப் பார்க்க ராமாநுஜர் வந்தபோது, அந்தக் குழந்தையை ஒரு கந்தையான துணியில் வைத்து எடுத்து வந்து, அவரிடம் கொடுத்தனர்.  அப்படி அந்தக் குழந்தையை ஒரு கிழிந்த துணியில் வைத்து எடுத்த வந்தார்களே, அந்தத் துணியும், அரங்கன் திருமேனியை அலங்கரித்த வஸ்திரமே ஆகும்.  அரங்கனின் வஸ்திரத்தில் வைக்கப்பட்டு எடுத்துவரப்பட்ட அந்தக் குழந்தை நல்ல நறுமணத்தோடு விளங்கியது.  கிழிந்த துணியால் மூடப்பட்டு இருந்தாலும், இந்தக் குழந்தைத் தங்கத்தைப் போல் பிரகாசிக்கும் என்றும், நாராயண மந்திரங்களை இந்த உலகத்தில் எங்கும் பரவச் செய்து, அனைவரையும் வாழ்விக்கும் என்று வாழ்த்தினார்.  கிழிந்த துணியால் மூடப்பட்டு எடுத்துவரப்பட்டதால். 

முதலியாண்டனின் மகனாய் அவதரித்த அந்தக்  குழந்தைக்குக் "கந்தாடை ஆண்டான்" என்றே பெயர் சூட்டினார் ராமாநுஜர்.     கந்தாடை ஆண்டான் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, பின்னர் "கோயில் கந்தாடை அண்ணன்" என்ற  திருநாமத்துடன் பெருமையுடன் திகழ்ந்தது.     முதலியாண்டான் வம்சத்தில் அவதரித்த அனைவரும் "கந்தாடையார்" என்றே அழைக்கப்பட்டனர்.   இதைச் சிறப்பிக்கும் வண்ணம், ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசத்தில் இருக்கும் வடக்கு மாடவீதியானது "கந்தாடை வீதி" என்றே அழைக்கப்படுகிறது.  

முதலியாண்டானின் புத்திரராக, கந்தாடை ஆண்டான் அவதரித்தது மாசி மாதம் புனர்பூசம் நகஷத்திரம் ஆகும்.  இராமபிரானின் இளைய சகோதரர்களில் ஒருவரான "சத்துருக்கணனின்" அம்சமாகவே கந்தாடை ஆண்டான் கருதப்படுகிறார்.  இராமபிரான் இட்ட பணியைச் செவ்வனே செய்தவர் பரதன்.  பரதன் தன்னை இராமனின் அடிமையாகவேக் கருதினார்.  ஆகையால், அவர் பரதாழ்வான் என்றே போற்றப்படுகிறார் ஸ்ரீவைஷ்ணவ சம்பிராதயத்தில்.  பரதனுக்கு அடிமையாய் இருந்து, அவர் இட்ட பணிகளைச் செவ்வனே செய்து வந்தவர் "சத்துருக்கணன்".  இராமபிரானின் தொண்டனான பரதனுக்குத் தொண்டனாய் இருந்து, சிஷ்ய லக்ஷணத்தை நன்கு நிறைவேற்றியவர் சத்துருக்கணன்.  ஆகையால், இவரும் "சத்துருக்கண ஆழ்வார்" என்று போற்றப்படுகிறார் ஸ்ரீவைஷ்ணவ சம்பிராதாயத்தில்.  இபப்டிபப்ட்ட பெருமை வாய்ந்த "சத்துருக்கண  ஆழ்வாரின்" அம்சமாகவே கருதப்பட்டார் முதலியாண்டானின் புத்திரரான "கந்தாடை ஆண்டான்".

அரங்கனின் அருளாலும், ராமாநுஜரின் ஆசியாலும் அவதரித்த கந்தாடை ஆண்டான், பகவத் ராமாநுஜரையே தனது ஆசார்யராகக் கொண்டார்.  மேலும், தனது திருத்தகப்பனாரான, முதலியாண்டானிடம், "ஸ்ரீபாஷ்யம், வேத சாஸ்திரங்கள் மற்றும் ஆழ்வார்களின் ஸ்ரீஸுக்திகள் (திவ்யப்ரபந்தங்கள்) ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.  அதற்கும் மேலாக, ஆட்கொண்ட வில்லி ஜீயர்  என்னும் ஆசாரியரிடத்தில் ரஹஸ்யார்த்தங்கள் பெற்று, ஞானத்தில் சர்வ வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார். ராமானுஜருக்கு மூன்று ஆசார்யர்கள் இருந்ததைப் போல், கந்தாடை ஆண்டானும் ராமாநுஜர், முதலியாண்டான் மற்றும் ஆட்கொண்ட வில்லிஜீயர் ஆகிய மூன்று ஆசார்யர்களைக் கொண்டிருந்தார்.  

பகவத் ராமாநுஜரின் ஆசியால் பிறந்து, அவர் அனுக்ரஹத்தால் சிறப்புற்று விளங்கிய கந்தாடை ஆண்டான், ராமாநுஜரிடத்தில் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். அதன் விளைவால், ராமாநுஜரிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்.  அது யாதெனில், அவரது  திருவுருவத்தை விக்ரஹமாகச் செய்து, அவர் அவதரித்த இடமான ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் அதைப் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று ராமாநுஜரிடம் தன்னுள் எழுந்த ஆசையைத் தெரிவித்து, அதற்கு அவரது ஆசியையும் அனுமதியையும் வேண்டி நின்றார்.  ராமாநுஜரும் அவர் வேண்டுகோளை ஏற்று, அப்படியே செய்யச் சொன்னார்.   தனது வேண்டுகோளை ராமாநுஜர் ஏற்றுக்கொண்டு, அதற்கு அனுமதி கொடுத்த அடுத்த நிமிடம், ஒரு சிற்பியை அழைத்து, ராமாநுஜரின் திருமேனியை விக்ரஹமாகச் செய்யுமாறு பணித்தார்.  அந்தச் சிற்பியும், கந்தாடை ஆண்டான் கூறியபடி, ராமாநுஜரின் திருவுருவத்தைச்  சிறந்த  விக்ரஹமாக வடித்துக் கொடுக்க, கந்தாடை ஆண்டான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு  ராமாநுஜரிடம் காண்பிக்கச் சென்றார்.  அதைப் பார்த்த ராமாநுஜர் மிகவும் மகிழ்ந்து, தனது அந்த விக்ரஹ உருவத்தை ஆரத் தழுவி, கந்தாடை ஆண்டானிடம் கொடுத்து, அவர் வேண்டியபடியே, தனது அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் தை மாதம் பூசம் நக்ஷத்திர தினத்தன்று  பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார்.  அதன்படியே, தை புஷ்ய நன்னாளில் பகவத் ராமாநுஜர் தானே உகந்த திருமேனியை ஸ்ரீபெரும்புதூர் கோயில் பிரதிஷ்டை செய்து, ஆண்டுதோறும் அவருக்குச் செய்யவேண்டிய உற்சவங்களையும் நிர்வஹித்துக் கொடுத்தார் கந்தாடை ஆண்டான்.    

கந்தாடை ஆண்டான் வம்சத்தில் பிறப்பவர்கள் அனைவரும் தென்னாசார்ய சம்பிராதாயத்தைச் சேந்தவர்கள் ஆவார்கள்.  இவருக்குப் பின்னே, இவரது வம்சத்தில் பிறந்தவர்கள் "கோயில் கந்தாடை அண்ணன்" வம்சத்தைச் சார்ந்தவர்களாகத் தங்களைக் கருதும் பெருமை பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள் என்றால், அது பகவத் ராமாநுஜரால் முதலியாண்டானும், முதலியாண்டானின் புத்திரருமான கந்தாடை ஆண்டானும் பெற்ற பெரும்பேறு ஆகும்.  

கந்தாடையாண்டான் வாழித் திருநாமம் :

"மாசிதனில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே 
மண்ணுலகில் எதிராசர் மலரடியோன் வாழியே 
தேசுடைய முதலியாண்டான் திருமகனார் வாழியே 
செழுமாலை நன்றார் துயரம் தீர்த்துவிட்டான் வாழியே 
வாய்சிறந்த தைவத்தை மனத்தில் வைப்போன் வாழியே 
வண்மை பெரும்பூதூரில் வந்தருள்வோன் வாழியே 
காசினியோர்க்கிதப் பொருளைக் காட்டுமவன் வாழியே 
கந்தாடையாண்டான் தன் கழலிணைகள் வாழியே. "

கந்தாடையாண்டான் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்