“முக்குணத்தில் முற்குணத்தோன்” என்று திருவழுந்தூர் வள்ளலான கம்பர் இராமனைப் புகழ்கின்றார். முக்குணத்தில் முற்குணம் சாத்வீகம். திருமாலுக்கு யார் மீதும் பாரபட்சம் இல்லை. எவ்வளவுக்கு ஒருவர் சாத்வீக குணம் கொண்டுள்ளாரோ அவ்வளவுக்கு அவர் அறவழி நடக்கின்றார்; அவ்வளவுக்குத் திருமகள் அவருக்கு அருள் செய்கின்றாள்; அவ்வளவுக்குத் திருமாலும் துணை நிற்கின்றார்.
பொதுவாகத் தேவர்கள் சாத்வீகமும் அறமும் மிக்கவர்களாகவும் அசுரரும் அரக்கரும் மற்ற இரண்டு குணங்களும் மறமும் மிக்கவர்களாகவும் இருப்பர். இதனால் தான் திருமாலும் பொதுவாகத் தேவர்கள் பக்கம் துணை நிற்கின்றார்.
குற்றவாளிகளை அரசன் தண்டித்தல் அறம்! இதை “இந்த அரசன் எப்போதும் குற்றவாளிகள் என்ற பிரிவினைச் சேர்ந்த மக்களைப் பெண் என்றும் பாராமல் அவமதிக்கின்றான்!” என்றா கூறுவது?? தவறு செய்யும் பிள்ளைகளைத் திருத்தக் கண்டிக்கும் தந்தையைப் பார்த்து “ஏன் உம் பிள்ளைகளை அன்பின்றி அவமதிக்கின்றீர்?” என்று கேட்டால் என்ன சொல்வது??
திருமால் கையில் மடிந்தாலும் அசுரரும் அரக்கரும் நற்கதியே பெறுவர்! அசுரரும் அரக்கரும் நல்வழி நடப்பின் அவருக்குத் திருமால் அருள் புரியத் தவறியதும் இல்லை.
ஆன்றோர்கள் கூற்றின் படி இதற்கான உதாரணங்களை ஆராய்வோம்.
1. பிரகலாதன்:
• இவர் கேட்காமலே பல முறை அற்புதமாகக் காத்தார்! தேவர்களுக்கு இப்படி அருளியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
• இவருக்காக ஒரு அவதாரமே எடுத்தார்.
• இவர் ஒரு திருமால் அடியவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சான்றோர் பகர்வர்.
2. நரகாசுரன்:
திருமாலின் சக்கிரம் இவரை வீழ்த்தியபின் இவர் ஒரு தெய்வீகச் சரீரத்தைப் பெற்றார். அப்போது இவர் கரம் கூப்பிக் கூறியது:
“ஐயனே, உன் திருவாழி என் மீது பட்டு என் பழைய அசுர சரீரம் நீங்கியது. அசுரர்கள் அடைய முடியாத நற்கதியை உன் அருளால் அடையப் போகின்றேன். இந்த நாளை அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, உனக்குச் சுவை மிக்க அன்னங்கள் படைத்துக் கொண்டாட வேண்டும்.” தீபாவளி பிறந்தது!
இதற்கு மேலும் ஒரு சான்று தேவையோ?
3. ரத்தினாவளி:
• இவள் மகாபலியின் புதல்வி.
• திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது அவரது சிறிய திருமேனியைப் பார்த்து “இந்தக் குழவிக்கு பால் கொடுக்க வேண்டும்” என்று தீவிரமாக விரும்பினாள்.
• திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தபோது தனது தந்தை மகாபலியின் மீதுள்ள அன்பினால் கலங்கி “இவனுக்கு விடத்தைக் கொடுக்க வேண்டும்” என்றும் தீவிரமாக விரும்பினாள்.
• திருமால் கண்ணனாக அவதரித்து இவளது இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றினார். இவளே பூதனை என்ற அரக்கியாகப் பிறந்து கண்ணனால் உயிர் உண்ணப்பட்டவள்!
• கண்ணனைக் கொல்ல முயன்ற இவள் வைகுந்தமும் அடைந்தாள் என்பது நோக்கத்தக்கது.
திருமால் அருள் பெற்ற அரக்கர்கள்
1. விபீடணன்:
• இவர் சீதையைத் திருடிச் சிறையில் அடைத்தக் கொடியோனின் தம்பி. நல்ல குணம் கொண்டதொரு தம்பி!
• இவரையும் இவருடன் வந்த 4 அரக்கரையும் எம்பெருமான் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக உடனே ஏற்றார் அன்றோ?
• ஆழ்வார்களும் இவரைச் செல்வ விபீடணன் என்றனர்!
• ஆசார்யர்கள் இவரது சரணாகதியை அன்றோ பெரிதும் போற்றி பாடினர்!
2. திரிசடை:
• இவள் இலங்கையில் வாழ்ந்த ஒரு அரக்கி - விபீடணனின் பெண் என்பர்.
• இவளது ஞானமும் சீதையிடம் காட்டிய பரிவும் அன்பும் எத்திறம்!
• இவள் இராமனின் புகழ் பாடியது எத்திறம்!
• இவளை வால்மீகி முனிவரும் கம்பர் பெருமானும் அருணாசல கவிராயரும் போற்றிய வகைதான் எத்திறம்!
3. சரமை:
• இவளும் இலங்கையில் வாழ்ந்த ஒரு அரக்கி - விபீடணனின் மனைவி என்பர்.
• இவளது நல்லொழுக்கமும் சீதையிடம் காட்டிய பரிவும் அவளுக்குச் செய்த சேவையும் எத்திறம்!
• சீதையால் அன்புடன் அணைக்கப் பெற்ற இவளது பேறு எத்திறம்!
• வால்மீகி முனிவர் இவளைப் போற்ற இயம்பிய அடைமொழிகள் எத்திறம்!
நம்பிக்கை இல்லை எனின் புகழ வேண்டாம் - ஆனால் வீண் பழி சுமத்தலாமா?
பகைவருக்கும் பரிவைப் பொழியும் புருடோத்தமனின் பண்பைப் புரிந்துகொள்ளாமல் பழிச்சொல் பேசுகின்றனர்.
காகம் வடிவில் வந்த இந்திரனின் பிள்ளையான சயந்தனைக் கொல்ல இராமன் அத்திரம் எய்தான். காகம் புகல் தேடிய போது அருளும் செய்தான். இராவணன் திருந்த மிகவும் பொறுமை காத்து “இன்று போய் நாளை வா” என்றான். இராவணன் திருந்தவில்லை - உயிர் இழந்தான்.
இராவணனின் மனைவி (மயன் என்ற அரக்கனின் புதல்வி) இராமனைப் பரம்பொருள் என்று அறுதியிடுகின்றாள். “தங்களுக்குத் தாய் போன்ற சீதையைத் தாங்கள் தீய எண்ணத்துடன் நெருங்கலாமா?” என்று அவனது சடலம் மீது அழுது புலம்பினாள். இராவணனின் மனைவியர் அனைவரும் “எல்லாம் இந்தச் சூர்பணகையின் தீச்செயலால் விளைந்தது” என்று கூறி அழுதனர்!
இவர்களும் தென் இந்தியர்கள் தானே? பெண்கள் தானே? ஆனால் இதை எல்லாம் சிலர் ஏனோ (கண்டும்?) காணாதது இருந்து விடுகின்றனர்!! நாத்தியைப் பழிக்க அப்படி அவர்கள் பேசிவிட்டனர் என்றும் கூறுவார்கள்!!!! மைத்துனரான விபீடணன் அவர்களிடம் நற்பெயர் பெற்றதையும் மறந்துவிடுவார்கள்!!!! காமாலை நோய் தீர்ந்தால்தானே ஒரு பொருளின் சரியான வண்ணம் புலப்படும்! இராவணனின் உண்மை முகம் என்ற கட்டுரையில் இராவணனுக்காகப் பரிந்து பேசுபவர்களுக்குச் சில உண்மைகளை வரைந்துள்ளேன்.
பிரதியும்னன் மனைவி பிரபாவதி, பாணாசுரனின் புதல்வி உஷை, இடிம்பை, கடோத்கசன், கண்டாகர்ணன் என்று வேறு சில உதாரணங்களும் உண்டு. தேவர்கள் தவறு இழைத்த போது அவர்களைத் திருமால் தண்டித்ததும் உண்டு. விரிவுக்கு அஞ்சி இத்துடன் அமைகின்றேன்.
முடிவுரை
“தேவரா? அசுரரா ? மனிதரா ? அரக்கரா ?”
“ஆண்பிள்ளையா ? பெண்பிள்ளையா ?”
“வடதேசத்தவரா ? தென்தேசத்தவரா ?”
என்பதா கேள்வி ??
“அறத்தின் பக்கம் நிற்பவரா? இல்லையா?”
என்பதன்றோ கேள்வி!!
சனாதன தருமம் பல ரத்தினங்கள் நிறைந்த, ஆழமான, மிடுக்கான போற்றத்தக்க மாகடல்.
திருமால் அருளால் நல்லாசான்களைப் பணிந்து அந்த ரத்தினங்களைப் பெற்று இன்புறுவோம்!