ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த நந்தவனத்தில், அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு தொற்றிக் கொண்டது. திடீரென்று அங்கிருந்து வந்த ஒரு குழந்தையின் அழுகுரல்தான் அதற்கு காரணம்.
அந்த நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட உடன், அந்த அழுகுரல் வந்த திசை நோக்கிச் சென்றார்.
அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது, அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக் கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளியெடுத்த அவர், அந்தக் குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.
இறைவனே தனக்கு அந்தக் குழந்தையை அளித்ததாகக் கருதி ஆனந்தக் கூத்தாடினார். அந்தக் குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டு, தன் குழந்தையாகப் பாசத்தை கொட்டி வளர்த்தார்.
அந்தக் குழந்தை வேறு யாருமல்ல — சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள்தான்!
ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில், ஆண்டாள் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்ட நாள்தான் ஆடிப்பூரம் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.
சிறு குழந்தையான ஆண்டாளுக்குத் தினமும் கண்ணனின் கதைகளை சுவைபடக் கூறுவார் பெரியாழ்வார். அதைக் கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.
பெருமாளுக்குத் தன் தந்தை தினமும் அணிவிக்கத் தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்குத் தெரியாமல் தானே சூடிக்கொண்டு தன் அழகைப் பார்த்து ரசிப்பாள்.
அருகே உள்ள கிணற்றைக் கண்ணாடியாக நினைத்து, அதில் தன் முகத்தைப் பார்த்து மகிழ்வாள். பின்னர் மாலையைக் கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள்.
ஒருநாள், அந்த மாலையில் ஆண்டாளின் தலைமுடி சிக்கியிருப்பதை பெரியாழ்வார் கவனித்தார். அதனால், அந்த மாலையைப் பெருமாளுக்குச் சாற்றாமல், வேறு ஒரு மாலையை அணிவித்தார்.
ஆனால் அன்றிரவே பெருமாள் கனவில் தோன்றி, “அவள் சூடிக் களைந்த மாலையே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு அணிவிக்க வேண்டும்.” என்று அருளினார்.
இதனால் ஆண்டாளுக்கு “சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்” என்ற திருநாமம் ஏற்பட்டது.
அன்று முதல் இன்று வரை, ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு “பூமாலை” என்று பொருள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி — என பல சிறப்பு பெயர்களால் ஆண்டாள் போற்றப்படுகிறார்.
