ஒன்றுமே செய்ய வேண்டாம் , விட்டலன் நாம மொன்றே உறுதுணை என்று போதித்த பக்தன் – விளக்கும் எளிய கதை
சாந்தோபா என்பவர் பண்டரிபுரத்தில் இருந்த மற்றொரு திவ்ய விட்டல பக்தர் அவர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை குருவாக கொண்டிருந்தார்கள்.
ஒன்றுமே செய்ய வேண்டாம், பேசாமல் “விட்டலா விட்டலா என்று அவனை உள்ளன்போடு நினை, உன்னுடைய வாழ்க்கை பிரச்னைகள், உலகத்தில் உன்னுடைய மற்ற பிரச்னைகள் எதுவாகிலும் அவற்றிலிருந்து உன்னை விடுவிக்கும்.
விட்டலன் நாம மொன்றே உறுதுணை என்று போதித்தவர். இதை கண்கூடாக அனுபவித்தவர்களும் இருந்தனர்.
அவர் இருந்த கிராமம் விட்டலன் இருந்த க்ஷேத்ரத்திலிருந்து வெகு தூரம் சிலநாட்கள் நடந்து பிறகு சந்திரபாகா நதிக்கு அக்கரை சென்றால் தான் தரிசனம்.
ஒருமுறை அவரது பக்தர்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து விட்டலனை தரிசிக்க கிளம்பினார்கள், போகும் இடமோ பூலோக வைகுண்டம், கூட வருவதோ விட்டலனின் திவ்ய பக்தர் சாந்தோபா பவார்.
கேட்க வேண்டுமா அவர்கள் சந்தோஷத்துக்கு
“விட்டல ஹரி நாம சங்கீர்த்தனம்” வானை பிளக்க மூன்று நாள் நடந்து பண்டரிபுரம் போக இப்போது சந்திரபாகா நதியை கடக்கவேண்டும். இருண்டிருந்த வானம் பொத்துகொண்டது.
அடைமழை விடாது பெய்ய எப்படி மேற்கொண்டு செல்வது என்று பக்தர்கள் கலங்க, விட்டலனை நோக்கி போகிறோம், இடையூறுகள் எதையும் லட்சியம் பண்ணவேண்டாம்.
அவன் நம்மை ஜாக்ரதையாக கூட்டி செல்வான், நடப்போம் என்று சாந்தோபா தைர்யம் கொடுத்தார்.
இதோ நதி வந்துவிட்டதே, வெள்ளம் கரை புரண்டோட ‘ஒ’வென்ற பேரிரைச்சலுடன் நதியில் வேகமாக நீர் ஓடியது.
அந்த காலத்தில் நதியை கடக்க பாலம் எதுவும் இல்லை, சிறு படகுகள் தான் செல்லும் அவை வெள்ளத்தில் செல்லாது, நீர் வடிந்தபிறகே நதியை கடக்கவேண்டும்.
இடைவிடா மழை, இன்னும் ஒரு வாரம் விடாது போல் இருக்கிறதே! பக்தர்கள் சோகமுற்றனர்.
“விட்டலா வழி காட்டு” என்று வேண்டிய சாந்தோபா அபங்கங்கள் பாட ஆரம்பித்தார்.
எதிரே நதியில் ஒரு பாலம் இருகரையும் இணைத்து தென்பட்டது.
“சாந்தோபா என்ன தயக்கம் மற்ற பக்தர்களோடு கடந்து வா” என்று அவர் காதில் மட்டும் ஒரு அசரீரி குரல் கேட்டது.
பக்தர்கள் அனைவரும் “விட்டல விட்டல பாண்டுரங்கா பண்டரிநாதா பாண்டுரங்கா” உள்மனதிலிருந்து பரிசுத்தமாக நாம சங்கீர்த்தனம் ஆற்றின் பேரிரைச்சலையும் மீறி கேட்க அந்த பாலத்தின் மீதேறி நதியை கடந்தனர்.
அவர்கள் பின்னே கடைசியாக சாந்தோபாவும் நதியை கடந்தார்
பக்தர்களின் ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை..
அக்கரை சென்றபின் சாந்தோபா நதியை பார்த்தபோது தான் உணர்ந்தார், தாங்கள் நடந்தது ஒரு பாலத்தின் மீது அல்ல ஸ்ரீமன் நாராயணன் மிக பெரிய கூர்மமாக எடுத்த அவதாரத்தின் மறு உரு போன்ற ஒரு பெரிய ஆமையின் முதுகு என்று..
பக்தி பரவசத்தில் விட்டலனின் கருணையில் திளைத்து, அவர் கண்களிலிருந்து பெருகிய ஆனந்த கண்ணீர் அந்த ஆற்று பிரவாகத்தை காட்டிலும் அதிகமா இருந்தது போல் இருக்கிறதே.
அவன் அருளால் மழையும் சட்டென்று நின்றது.
அனைவரும் விட்டலன் ஆலயம் நுழைந்து கண்கொள்ளா திவ்ய தரிசனம் பெற்றனர்.
இடுப்பில் கை கட்டி அவர்கள் அனைவருக்கும் முக மலர்ச்சியுடன், புன்சிரிப்புடன் விட்டலன் தரிசனம் கொடுத்தான்.
எத்தனையோ யுகங்களாக நின்று நமக்கும் கொடுக்க காத்திருக்கிறான்,
நாம் தான் இடையூறாக உள்ள அனைத்து வெள்ளங்களையும் அவன் மேல் உள்ள பக்தி பாலத்தின் மூலம் கடந்து அவனை தரிசிக்க வேண்டும்.
பண்டரிநாத் மகாராஜ் கீ ஜெய் …!
விட்டல விட்டல ஜெய் ஹரி விட்டல
விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல
பண்டரிநாத விட்டல
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.